பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயரந்தீர்த்தநாதர்) திருக்கோவில், ஓமாம்புலியூர்

Mar 31 2025

 



பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயரந்தீர்த்தநாதர்) திருக்கோவில், ஓமாம்புலியூர்



 

அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில




 

துயரந்தீர்த்தநாதர் கோவில் வரலாறு




பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில், கடலூர் மாவட்டத்திலுள்ள ஓமாம்புலியூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவில், சிவபெருமானின் வியாக்ரபுரீஸ்வரர் என்ற வடிவத்தில் வழிபடப்படுகிறது. இதன் வரலாறு சங்ககாலத்துக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. நாயன்மார்களால் பாடப்பட்ட இந்த கோவில், சிவபெருமானின் பிரணவ வடிவத்தை பிரதிபலிக்கிறது. இங்கு உள்ள சிவலிங்கம், பிரணவ மந்திரத்தின் வடிவமாகவும், சிவபெருமானின் சக்தியை வெளிப்படுத்தும் வகையிலும் உள்ளது. சிவனின்      தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில்     இது 31 வது தேவாரத்தலம் ஆகும்.



உமாதேவி ஒரு முறை கைலாயத்தில் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவபெருமான் அதற்குரிய விளக்கத்தை உமையம்மைக்கு சொல்லிக் கொண்டிருக்கும்போது உமையின் கவனம் திசை திரும்பியது. சிவபெருமான் உமாதேவியின் மீது கோபம் கொண்டு அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி தண்டனை கொடுத்து விட்டார்.



 



அதன்படி பூமிக்கு வந்த பார்வதிதேவி ஓமாப்புலியூரில் தங்கியிருந்து இத்தலத்து சரஸ்வதி தேவியை வணங்கி சிவனை நினைத்து இலந்தை மரத்தின் அடியில் கடுந்தவம் மேற்கொண்டாள். அம்பாளின் தவத்தினை மெச்சி இறைவன் தேவி விரும்பியபடி இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி வடிவில் உமாதேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்ததார். உபதேசம் செய்யும்போது இடையூறு வரக்கூடாது என்பதற்காக நந்திகேஸ்வரரை வாசலில் காவலுக்கு வைக்கிறார். அப்போது முருகப் பெருமான் அங்குவர நந்தி தடுக்கிறார். முருகப் பெருமான் வண்டு உருவம் எடுத்து அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகம் வழியாக உள்ளே சென்று, அம்பாள் தலையில் சூடியிருக்கும் பூவில் உட்கார்ந்து குரு தட்சிணாமூர்த்தியாக இறைவன் அம்பாளுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுக் கொண்டார். (சுவாமிமலையில் முருகப் பெருமான் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தது ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு உபதேசம் செய்யும் போது ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டதால் தான்). இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்த தலமாதலால் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றது.



ஓமம் என்ற சொல் வேள்வியைக் குறிக்கும். வேள்விச்சிறப்புடைய ஊர் எனபதாலும் இத்தலம் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்து வந்தது என்றும், ஹோமப் புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார்.



ஓமாம்புலியூர் கோவில் அமைப்பு



கிழக்கு நோக்கிய இக்கோயில் மதிற்சுவருடன் கூடிய ஒரு வாயிலுடன் அமைந்துள்ளது. வாயிலுக்கு எதிரில் கௌரிதீர்த்தம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம். அடுத்துள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமான் சந்நிதி உள்ளது. பிராகர வலம் முடித்து உட்சென்றால் நேரே கருவறையில் சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் சுயம்புமூர்த்தியாக இறைவன் காட்சி தருகின்றார். சுவாமி சந்நிதியில் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும், மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன.



இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகச்சிறப்புடையவர். இறைவன் சந்நிதியில் வலதுபுறம் தெற்கு நோக்கி உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சி தருகின்றார். ஓமாம்புலியூர் தலத்தில் சிவாகம ரீதியாக கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தியும், இறைவன் சந்நிதிக்கும், அம்பாஈள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருள பாலிப்பது இத்தலத்தில் மட்டும் தான். இரண்டு தட்சிணாமூர்த்தி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.



இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் கருவறை கோஷ்டத்தில் காணப்படும் நடராசரின் சிலாரூபம். இது வியாக்ர பாதருக்குக் காட்சி தந்த வடிவம் என்று கூறப்படுகிறது. ஏனைய கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை முதலியோர் உள்ளனர். அம்பாள் சந்நிதி அழகாகவுள்ளது. பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமானுக்கும் தனி சந்நிதி உள்ளது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது என்பதும் குறிப்படத்தக்க அம்சமாகும்.



 



பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று. மற்றவையாவன: பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), கானாட்டம்புலியூர், எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர். இவற்றில் கானாட்டம்புலியூர் இத்தலத்திலிருந்து அருகில் உள்ளது. எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய இரண்டும் நடுநாட்டுத் தலங்கள். பெரும்பற்றப்புலியூர், ஓமாம்புலியூர், கானாட்டம்புலியூர் ஆகிய மூன்றும் காவிரி வடகரைத் தலம். இந்த ஐந்து தலங்களிலும் வியாக்ரபாத முனிவர் ஈஸ்வரனை வழிபட்டுள்ளார்.



இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவக்கரசர் பதிகம் ஒன்றும் உள்ளன. ஞானசம்பந்தர் பதிகத்தில் இத்தலம் “ஓமமாம்புலியூர்” என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் அப்பர் பாடலில் “ஓமாம்புலியூர்” என்று மருவி வருகிறது. இருவரும் தங்கள் பதிகங்களில் இத்தலத்தை வடதளி என்றும் கூறிப்பிட்டுள்ளனர். ஆலய முகப்பு வாயிலுக்கு எதிரிலுள்ள கெளரி தீர்த்தத்தின் அக்கரையில் வடதளி என்று ஓர் சிறிய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் இறைவன் பெயர் நாகவல்லி சமேத வடதளீஸ்வரர்.



ஞானசம்பந்தர் பதிகத்திலிருந்து ஒரு பாடல்:



பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்

வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்

தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்

ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.



திருநாவக்கரசர் பதிகத்திலிருந்து ஒரு பாடல்:



ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை

அலைகடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும்

ஏராரும் மதிபொதியும் சடையினானை

எழுபிறப்பும் எனையாளா உடையான் தன்னை

ஊராரும் படநாகம் ஆட்டுவானை

உயர்புகழ்சேர் தரும் ஓமாம்புலியூர் மன்னும்

சீராரும் வடதளி எம் செல்வன் தன்னைச்

சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே.



பிரார்த்தனை: கல்வி, கேள்விகளில் சிறந்து திகழ இங்கு அதிகளவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வழிபடுகிறார்கள்.



நேர்த்திக்கடன்: வியாழக்கிழமை மற்றும் குரு பெயர்ச்சி காலங்களில் இங்குள்ள குரு பகவானுக்கு விசேஷ அபிசேக ஆராதனை செய்கிறார்கள்.



 



பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில் திருவிழா



பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில், வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் முக்கியமான திருவிழா மகா சிவராத்திரி. இந்த நாளில், பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு ஆராதனை செய்கின்றனர். இங்கு குருபெயர்ச்சி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது. மேலும், பண்டிகை காலங்களில், சிறப்பு பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். இவை, பக்தர்களின் ஆன்மீக அனுபவத்தை மேலும் மேம்படுத்துகின்றன.



பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவிலுக்கு எப்படிப் போவது?



சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் பேருந்து வசதியுள்ளது. சிதம்பரத்தில் இருந்து சுமார் 31 கி.மீ. தொலைவு. காட்டுமன்னார்குடியிலிருந்து சுமார் 7 கி.மீ.தொலைவு. சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி, மோவூர் வழியாக அணைக்கரை செல்லும் நகரப் பேருந்து எண் 41 இத்தலம் வழியாகச் செல்கிறது. கோவில் வாயிலில் இறங்கிக் கொள்ளலாம்.



Omampuliyur Shiva Temple Timings



பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில் திறக்கும் நேரம்: ஓமாம்புலியூர் துயரந்தீர்த்தநாதர் கோவில் காலை 06:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும்.



 



Omampuliyur Shiva Temple Contact Number: +91-4144264845+91-4144208091