Sengalipuram Sri Parimala Ranganathar Temple / சேங்காலிபுரம் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம்- 

Mar 31 2025

 



Sengalipuram Sri Parimala Ranganathar Temple / சேங்காலிபுரம் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம்- 



 



சேங்காலிபுரம் என்றாலே காலக்ஷேப சக்ரவர்த்தியாக இருந்த சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் பற்றியே அனைவருக்கும் நினைவு வரும்.  ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் தனது பிரசங்கள் மூலம்  மஹாபாரதம், ராமாயணம் போன்றவற்றை பரப்பியதும், மகிஷாசுர மர்த்தினி ஸ்லோகங்களை பாடலாக பாடி  பரப்பியதும் மக்கள் மனதில் இருந்து மறையாது. அவருடைய அண்ணன் பேரனான  வித்தல்தாஸ்  மஹராஜ் கோவிந்தபுரத்தில் பாண்டுரங்கருக்கு ஒரு ஆலயத்தையும் அமைத்து உள்ளார்.  அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த குடும்பங்கள் வாழ்ந்துள்ள ஊரே சேங்காலிபுரம் ஆகும்.  முன்னர் இந்த ஊரின் பெயர் திருக்கலீஸ்வரம் என்று இருந்தது.  சாஸ்திரங்களிலும் இந்த ஊரை சிவகலிபுரம் எனக் குறிப்பிட்டு உள்ளார்கள். பதினொன்றாம்  நூற்றாண்டில்  ராஜேந்திர சோழ மன்னனின் படை தளபதியான அரவான் ராஜராஜன் என்பவர்  சாளுக்கிய மன்னனான ஜெயசிம்மனை தோற்கடித்ததினால், இந்த ஊரை  அவருக்கு பரிசாக மன்னன் கொடுத்து விட, இந்த  ஊரின் பெயர் ஜயசிங்ஹ குலகாலபுரம்  என ஆயிற்று. நாளடைவில் அதுவே மருவி சிங்காலபுரம்  எனவும் சேங்காலிபுரம் என்றாயிற்றாம்.



கும்பகோணம் -திருவாரூர் செல்லும் வழியில் குடவாசல்  எனும் ஊரின் அருகில் உள்ள இத்தனை பெருமை வாய்ந்த சேங்காலிபுரத்தில் பல புராதான, வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்கள் உள்ளன என்ற செய்தி குறித்து பலருக்கும் தெரியவில்லை என்பது வியப்பாக உள்ளது.  சேங்காலிபுரத்தில் மூன்று பெருமாள், நான்கு சிவன், ஒரு  முருகன், இரண்டு பிள்ளையார், ஒரு  மாரியம்மன், ஒரு பிடாரி ஆலயம்  என  சுமார் பதினெட்டு ஆலயங்கள் உள்ளன.  அவற்றில் மிக பிரசித்தமானவை  ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ பரிமள ரங்கநாத ஸ்வாமி  ஆலயமும், தத்தகுடீரம் எனும் ஸ்ரீ தத்தாத்திரேயர் ஆலயமும் ஆகும்.    ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஒரு அம்சத்தைக் கொண்டவர்  ஸ்ரீ தத்தாத்திரேயர் ஆவார்.   ஆலயங்களைக் குறித்து சாதாரணமாக பழமையான சொல் ஒன்று உண்டு. ஒரு ஆலயத்துக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த ஆலயத்துக்கு செல்ல பிராப்தம் மட்டும் அல்ல அந்த ஆலய தெய்வம் விரும்பினால் மட்டுமே செல்ல முடியும் என்பதே அந்த பழமை சொல் ஆகும். அதனால்தான் ஒவ்வொரு யுகங்களிலும், இந்த ஊரிலேயே அவதரித்துள்ள, பல புராண வரலாறுகளை மையமாகக் கொண்ட, ஸ்வயம்புவாக எழுந்தருளி உள்ள  பெருமாளை அவர் வீற்றுள்ள   ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ பரிமள ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் பிராப்தம் உள்ளவர்களால் மட்டுமே தரிசிக்க முடிகின்றது.   இந்த ஊரில் ஒரு காலத்தில் வேத நெறிமுறையை தவறாமல் கடைபிடித்தபடி   நிறைய அந்தணர்கள் வாழ்ந்திருந்தார்கள். அவர்களில் ஸ்ரீ முத்தண்ணாவாள்  என்பவர் முக்கியமானவர். எவர் ஒருவர் அவரது சமாதிக்கு சென்று வணங்கி வருவார்களோ அவர்களுக்கு பலவிதமான நோய்கள் குணமாவதாகவும்   வயிற்று வலி போன்ற ரோகங்கள் குணமாகி வந்ததாகவும்   கூறுகின்றார்கள்.



சாதாரணமாக ஆலயங்களை ஐந்து  வகையிலான ஆலயங்களாக பிரித்துக் கூறுவார்கள். அவற்றை ஸ்வயம் வியக்தம், தைவிகம் , ஆர்ஷம், மானுஷம், மற்றும் பௌராணம் என்ற ஐந்து பெயர்களில்  அழைக்கின்றார்கள். இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அந்த ஆலயங்களை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம், அதாவது தானாகவே அவதரித்த தலம் என்பார்கள்.  முனிவர்கள், ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்களை ஆர்ஷம் என்று சொல்கிறோம். தைவிகம் என்றால் தேவர்களால் அமைக்கப்பட்ட மற்றும் தேவர்கள் முதல் பல துணை,  இணை தெய்வங்களாலும் வழிபடப்பட்ட விக்ரஹங்களை ஸ்தாபனம் செய்து வழிபடும் ஆலயம் என்பார்கள்.   அரசர்கள், பக்தர்கள் உள்ளிட்ட மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருத்தலங்கள் மானுஷம் என்றழைக்கப்படும். பௌராணம் எனும் ஆலயங்கள் புராண வரலாற்றில் பெருமையாக கூறப்பட்டுள்ள  ஆலயங்கள் ஆகும்.



பொதுவாகவே ஸ்வயம் வியக்தம் மற்றும்  தைவிகம் எனப்படும் ஆலயங்களில் செல்லும் பக்தர்கள் அவற்றில் உள்ள தெய்வீக சக்தியின் ஆற்றலை, அதிர்வலைகளை நன்றாகவே உணர முடியும். அதே சமயத்தில் அந்த ஆலயங்களுக்கு அனைவராலும் செய்ய முடியாது. ஒருவருக்கு பிராப்தம் இருந்தால் மட்டுமே அப்படிப்பட்ட ஆலயங்களுக்கு செல்ல இயலும் என்பதாக ஆன்மீக மஹான்கள் கூறுவார்கள். அதை போலவே ஸ்வயம் வியக்தம் எனப்படும் ஆலயங்களில் செய்யப்படும் பூஜைகள் மற்றும் ஆராதனைகளின் பலன்களும் பதினான்கு உலகங்களுக்கும் நன்மைகளை தந்து அங்குள்ள மக்களைக் காப்பற்றுமாம்.



சேங்காலிபுரத்தின் முன் கால  பெயர் ஸ்வயம் கலிகரபுரம் மற்றும் புல்லாகவனம்  என்று கூட இருந்தது. இந்த தலத்தில் பல முனிவர்களும், ரிஷிகளும் மகான்களும், தவம் இருந்து பெருமாளின் அனுகிரகத்தை அடைந்துள்ளார்கள். கலிஹரபுரம் என்றால்  கலியின் தோஷங்களை விலக்க பெருமாள் அவதரித்த தலம் என்பதாகும்.  இதனால்தான் தானாகவே இங்கு அவதரித்த பெருமாளை ஸ்வயம்கலிஹரர் என்று அழைத்து வந்துள்ளார்கள். அதை போலவேதான் புல்லாகவனம் என்றால் பல்வேறு  கால்நடைகள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த அடர்ந்த வனப்பகுதி என்பதாகும். இங்குள்ள ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயத்தின்  கிழக்கு பக்கத்தில் உள்ளது ஒரு சிவன் ஆலயம். அதன் பெயர் சிவகங்காதீரம் என்பதாகும். அங்கு நிஸ்துலா அம்பிகா சமேத  சூளேஸ்வரர்  எனும் பெயரில் சிவபெருமான் அருள் பாலித்துக் கொண்டு உள்ளார். இதே ஊரின் நேர் பின்புறத்தில்  உள்ள ஆலயத்தில்  ப்ரஹன்நாயகி சமேத துந்துபிஸ்வரர் அருள் புரிந்து கொண்டு  உள்ளார். மற்றும் ஆலயத்தின் வலது பக்கத்தில் மும்மூர்த்திகளின் அவதாரமான ஸ்ரீ தத்தாத்திரேயர்  ஆலயமும் அமைந்து உள்ளது. இப்படியாக இந்த மூன்று ஆலயங்களால் சூழ்ந்துள்ள இந்த ஆலயம் பெருமை பெற்ற தலமாக உள்ளது.



சேங்காலிபுரத்தில்  உள்ள பரிமள ரங்கநாதர் ஆலயம் ஸ்வயம் விக்தத்கில் அடங்கும் ஆலயம் ஆகும்.  கலி தோஷங்களை விலக்க  பெருமாள்  பக்தர்களின் குறைகளை நீக்க, தானாகவே இங்கு எழுந்தருளி,  சயனக் கோலத்தில், ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக  காட்சி தந்தபடி, ஸ்வயம் கலிகலிஹரர் எனும் பெயரில் அருள் புரிந்து கொண்டு உள்ளார்.    பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் சயன கோலத்தில்  காணப்படும் பெருமாள் ஆகாயத்தை நோக்கி படுத்த நிலையில் காணப்படுவார் .  ஆனால் இங்குள்ள  பெருமாளோ  சயன கோலத்தில் இருந்தாலும், தனது முகம் உட்பட முழு சரீரத்தையும் பக்தர்களுக்கு கட்டி அருள் பாலிக்கும் வகையில்  சயன கோலத்தில் காட்சி தருகின்றார்  என்பது ஒரு  அதிசய  காட்சியாகும். தனது ஒரு கைமீது தலையை வைத்து படுத்தபடி சயன கோலத்தில் உள்ளார். பூமி மீது நேரடியாக தலையை வைத்துக் கொண்டு படுக்கலாகாது என்பது ஒரு நெறிமுறை என்பதினால், அதை தவிர்க்கவே தனது ஒரு கையின் மீது தலையை வைத்துக் கொண்டு படுத்து உள்ளார் என்பதாக இதற்கான விளக்கம் தரப்படுகின்றது.



\"\"



இந்த ஆலயத்தின் மேன்மைக் குறித்த சில கதைகள் உள்ளன. புதுக் சக்கரவர்த்தி   என்ற ஒரு மன்னன் தனக்கு தெய்வீகமான ஞானம் வேண்டும், அதாவது தெய்வங்களை பற்றிய அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்  என்ற ஆவலில்  இங்கு வந்து தவம் இருந்தபோது, பெருமாள் இங்கு ஸ்வயமாக அவதரித்து  அவருக்கும் காட்சி தந்து, அவர் கேட்ட ஞானத்தையும் தந்தருளியதான வாய் மொழிக் கதை உள்ளது. அந்த மன்னன் பிற்காலத்தில் மரணத்தை அடையாமல் பெருமாளோடு ஐக்கியம் ஆகிவிட்டதாகவும் ஒரு கதை உள்ளது. அதை போலவே ஸ்ரீமன் ராமர் பிறப்பதற்கு பல காலத்துக்கு முன்பாகவே தசரத சக்ரவர்த்தி  தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக பல  ஆலயங்களிலும்  யாகங்கள், பூஜைகள், பரிகாரங்கள்  செய்தும் எந்த பலனும் கிடைக்காமல் போனதினால் தனக்குப் பிறகு தனது தேசத்தை பரிபாலனம் செய்ய எந்த பிள்ளையும் இல்லையே என மனம் ஒடிந்து போன நேரத்தில், மீண்டும் யாரோ ஒரு முனிவர் கொடுத்த அறிவுரையை ஏற்றுக் கொண்டு த்ரேதா யுகத்தில் இந்த ஷேத்திரத்துக்கு வந்து  சுமார் ஒரு வருட காலம் தவத்தில் இருந்தார் . ஆனாலும் அவருக்கு பிள்ளை பிறக்கும் எந்த ஒரு அறிகுறியும்  தெரியாமல் இருக்கவே அங்கிருந்து  வருத்தத்துடன் திரும்பிப் போகையில், அவர் முன் தோன்றிய ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி ‘உனக்கு அனுக்கிரஹம் கிடைக்கும் வேளை வந்து விட்டதினால் இன்னமும் சற்றே இங்கிருந்து புத்திர பாக்கியம் கிடைக்க பெருமாளை தோத்திரம் செய்’ என அழைத்தார்கள். அந்த  நிலையில் இங்கேயே இரு என கூறும் வகையில் காட்சி தரும்  கைகளுடன் இரு தேவிகளும் காணப்படுகின்றார்கள். அந்த தேவிகளின் கைகளை உற்றுப் பார்த்தால் இந்த காட்சியைக் காணலாம்.  பிற ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இரு தேவிகளும் கைகளில் பூ அல்லது ஆயுதங்களோடு காட்சி தர இங்கு மட்டுமே ‘ இங்கு இன்னும் சற்று  இரு’ என கூறுவது  போன்ற நிலையில் உள்ள கைகளோடு காட்சி தருகிறார்கள்.  அதைக் கேட்டு படுத்திருந்த பெருமான் அங்கேயே நின்றிருந்த தசரதரை நோக்கி  சற்றே ஒருக்களித்து படுத்துக் கொண்டு கூறினாராம் ‘ தசரதா, நான் உன்னுடைய தவத்தினால் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனாலும் இன்னமும் உனக்கு உள்ள பாவங்களை தொலைத்துக் கொள்ள  சில புண்ணிய காரியங்களை செய்ய வேண்டி உள்ளது. அவற்றையும் நீ செய்து முடித்தப் பின்னர், நானே உனக்கு புத்திரனாக பிறப்பேன்’ என அருள் புரிந்தார். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து போன தசரதன் ஊர் திரும்பி, தனது  அரச சபையைக் கூட்டி தான் செய்துள்ள  எதோ ஒரு பாவத்தினால்தான் தனக்கு இன்னமும் புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை என்பதை தான் தெரிந்து கொண்டதினால், அந்த பாபத்தைக் களைந்து கொள்ள, அரசர்கள் கடைபிடிக்கும் பாவப் பரிகாரமான அஸ்வமேத யாகத்தை செய்ய உள்ளதாகக் கூறி,  அவருடைய குருவான வஷிஷ்டருடைய அறிவுரையையும் ஆசீர்வாதங்களையும் கேட்டாராம். உடனடியாக வசிஷ்டரும், அவருக்கு ஒன்றல்ல, இரண்டல்ல மாறாக  நான்கு பிள்ளைகள் பிறக்கும் என தசரதனை ஆசிர்வதித்தப் பின்னர் சற்றே யோஜனை செய்து பார்த்தாராம் ‘சாதாரணமாக மன்னர்கள் அரச சபையைக் கூட்டி பாவப் பரிகாரத்திற்கு என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்பார்கள். ஆனால் அதற்கு மாறாக தசரதனோ பாவத்திற்கு  பரிகாரமாக தான் செய்ய உள்ள பரிகாரத்தையும்  அல்லவா கூறி உள்ளார் என்பதினால் அது அவர் எடுத்த முடிவாக இருக்காது. சேங்காலிபுரத்துக்கு சென்று தவம் புரிந்துள்ளதினால், அங்கு எழுந்தருளி உள்ள  ஸ்ரீ  ரங்கநாத பெருமானே அதை அவருக்கு கூறி இருக்க வேண்டும்’ என நினைத்தாராம்.  இப்படியாக அஸ்வமேத யாகத்தை செய்த   தசரதனுக்கு நான்கு மகன்கள் பிறந்தனராம். இதன் மூலம் என்ன விளங்கியது என்றால் இராமாயண காலத்துக்கு முற்பட்ட காலத்திலேயே இந்த தலம் இருந்திருக்க வேண்டும். அங்கு  பெருமாள் எதோ ஒரு ரூபத்தில் எழுந்தருளி இருந்தார் என்பதே.  அதனால்தான்  ராமனாக அவதரிக்க உள்ள காலத்தில், தான் கடைபிடிக்கும் தர்மத்திற்கேற்ப  குணம் கொண்ட யாரை தந்தையாக அடைவது என நினைத்திருந்த பெருமாள், தசரதனை அங்கு வரவழைத்து, தானே அவருக்கு மகனாக பிறப்பதாக வாக்குறுதி  தந்து அருள் புரிந்துள்ளார்.



அதை போலவேதான் தனது தந்தை பரீக்ஷித்து மரணம் அடைக்க காரணமாக இருந்த சர்ப இனத்தையே அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்  ஒரு யாகத்தை செய்து  பல சர்பங்களை கொன்ற  பாவத்தினால் ஜனமேஜயனுக்கு உடம்பெல்லாம்  பாம்புத் தோல் உறைவதை  போன்ற சரீர வியாதி வந்து விட்டது. அதற்கு எங்குமே நிவாரணம் கிடைக்காத நிலையில், துவாபர யுகத்தில் இந்த தலத்துக்கு வந்த  ஜனமேஜயன், இங்குள்ள ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டு நிவாரணம் பெற்றதாக வரலாற்று செய்திகள் வாய்மொழிக் கதையாக கூறப்பட்டு வருகின்றது.



அதை போலவே பெருமாளையே வணங்கித் துதித்த காரணத்தினால் தனது மகன் எனவும் பார்க்காமல் பிரகலாதனை  ஹிம்சித்த அவரது தந்தையான ஹிரண்யகசிபுவை, தன்னை அறியாமலேயே  தான் வணங்கிய  பெருமாளையே  நரசிம்ம அவதாரத்தை எடுக்க வைத்து கொன்ற பாவத்தினால் பிரஹலாதர்  பித்ரு ஹத்தி அதாவது பித்ருவை கொன்ற தோஷத்தை அடைந்தார்.  அதை களைந்து கொள்ள பிரஹலாதர்   பெருமாளை தஞ்சம் அடைய, அவரோ புல்லாகவனம் எனும் ஷேத்திரத்துக்கு சென்று, அங்கு  தான் வரதராஜர் மற்றும் ரங்கநாதராக உள்ள  ஆலய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, தன்னை அங்கே  வழிபட்டு தோஷத்தை களைந்து கொள்ளுமாறு கூறினாராம். அந்த ஷேத்திரமே இப்போதுள்ள  சேங்காலிபுரம்  என்பதினால் இங்குள்ள ஸ்ரீ ரங்கநாத பெருமாள் எத்தனை யுகங்களாக இங்கு மீண்டும் மீண்டும் பல்வேறு ரூபங்களிலும் பெயர்களிலும் அவதரித்து உள்ளார் என்பது விளங்கும்.



இப்படியாக யுகம் யுகமாக அவதரித்து வந்த பெருமாள் ஆலயம் இங்கு அமைந்த வரலாறும் சுவையானது. சுமார் 500  அல்லது 6௦௦ ஆண்டுகளுக்கு முன்னால், இந்த ஊரில் இருந்தவர்கள், தற்போது இந்த ஆலயம் உள்ள இடத்தில் நடைபெற இருந்த  ஒரு சுப காரியத்திற்கு கிளம்பிச் சென்று கொண்டு இருந்தபோது, வழியில் ஒரு பைத்தியம் வந்து அவர்களை அங்கு செல்லாமல் தடுத்து நிறுத்தி, அங்கு பெருமாள் புதைந்து உள்ளார், அங்கு பெருமாள் புதைந்து உள்ளார் என மீண்டும் மீண்டும் கத்தினார். அதைக் கேட்டு  சுப காரியம் தடைபெறுகின்றதே எனக் கோபம் கொண்டவர்கள் அவர் கூறிய இடத்தை தோண்டிப் பார்ப்பதாகவும் , அப்படி அங்கு அந்த பைத்தியம் கூறியபடி  பெருமாள் காணப்படவில்லை எனில் அந்த குழியிலே அவரை கொன்று புதைத்து விடுவோம் எனக் கூறிவிட்டு அந்த இடத்தை தோண்டினார்களாம். ஆனால் அன்று மாலைக்குள்ளேயே அங்கு புதைந்து இருந்த பெருமாள் தலைப் பகுதியை கண்டு அதிசயித்தார்களாம். மீண்டும் மறுநாள் வந்து தோண்டி பார்க்கலாம் என வீடுகளுக்கு சென்று விட்டார்கள். அன்று இரவே அவர்கள் அனைவரது கனவிலும் தோன்றிய பெருமாள், தன்னை எந்த கோலத்தில் பார்த்தார்களோ அதே கோலத்தில் அங்கேயே  பிரதிஷ்டை செய்து, ஆலயம் அமைத்து வழிபட்டால் அவர்களை தாம் காப்பாற்றுவதாக அருள் மொழி கூற அவர்களும் மறுநாள் அதே இடத்துக்கு சென்று பூமியை தோண்டியபோது அங்கு புதைந்து இருந்த மொத்த சிலைகளும் கிடைத்தன. அங்கேயே தற்போது காணப்படும் ஆலயமும் எழுந்தது. ஆலயத்தில்   உள்ள பெருமாளுடைய வலது காலில் ஆறு விரல்கள் உள்ளன. அதை தரிசிப்பவர்களுக்கு பெரும்  அதிருஷ்டம் வரும் என்பது நம்பிக்கை ஆகும்.  நான்கு பக்கமும் சிவாலயம் உள்ள இந்த ஆலயத்தின் சன்னதியை சுற்றி ஏழு பிராகாரங்கள்  இருந்துள்ளது  என்கின்றார்கள். இவருக்கு பூர்வ ஜென்ம புண்ணியம் உள்ளதோ அவர்களால் மட்டுமே இந்த ஆலயத்திற்கு வந்து பெருமாளை தரிசிக்க முடியும் என்பதாக இங்குள்ள ஆலயத்தின் கூறுகின்றார்கள். அதனால்தான் இத்தனை மகிமை வாய்ந்த இந்த ஆலயத்தைக் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.



 



 



\"2\"