லலிதாம்பிகை கோயில் திருமீயச்சூர், திருவாரூர்

Apr 02 2025

லலிதாம்பிகை கோயில் திருமீயச்சூர்,  திருவாரூர்



 



திருமீயச்சூர். அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர்.



திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலய தல வரலாறு காசிப முனிவரின் பத்தினிகளாக கர்த்துரு, விநதை இருவரும் சிவபெருமானை வழிபடுகின்றனர். இருவரின் பக்தியில் இறைவன் மகிழ்ந்து அவர்கள் முன் தோன்றி இருவருக்கும் ஒவ்வொரு அண்டத்தைக் (முட்டையை) கொடுக்கிறார். இதனைக் குறிப்பிட்ட காலமான ஒரு வருடம் பூஜை செய்து பாதுகாத்து வந்தால், உலகம் பிரகாசிக்கும் சத்புத்திரன் பிறப்பான்” என்று கூறி மறைந்தார். இருவரும் அண்டத்தைப் பாதுகாத்துப் பூஜை செய்து வந்தனர். ஒரு வருடம் கழித்து விநதை யின் அண்டத்திலிருந்து ஒரு பட்சி பிறந்தது. உடனே விநதை ஈஸ்வரனை நினைத்து, “என்ன இறைவா! எனக்குத் சத்புத்திரன் பிறப்பான் என்று கூறினாய். ஆனால் பட்சி பிறந்துள்ளதே” என்று வருந்தி வேண்டுகிறாள்.



இறைவன், “நான் கூறியது போல் அவன் மகாவிஷ்ணுவுக்கு வாகனமாய் கருடன் என்ற பெயரில் உலகமெங்கும் பிரகாசிப்பான்” என்றார்.விநதைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்ற ஏக்கத்தில் அவசரப்பட்டு கர்த்துரு தான் பாதுகாத்துப் பூஜை செய்து வந்த அண்டத்தை பிட்டப் பார்த்தாள். அதிலிருந்து தலை முதல் இடுப்பு வரை வளர்ந்த அங்கஹீனனாய் ஒரு குழந்தை பிறந்தது. அவளும் இறைவனை நினைத்து, “இப்படி ஆகி விடடதே!” என்று இறைஞ்சினாள். இறைவன், “நான் கூறியது போலவே இவன் சூரியனுக்குச் சாரதியாய் இருந்து உலகம் முழுவதும் பிரகாசிப்பான்” என்றார். அங்கஹீனனான அருணன் தான் கைலாசம் சென்று ஈஸ்வரனைத் தரிசனம் செய்து வர எண்ணி சூரியனிடம் அனுமதி கேட்டான். சூரியனோ, “நீ அங்கஹீனன் (நொண்டி). உன்னால் ஈஸ்வரனைத் தரிசனம் செய்ய முடியாது” என்றெல்லாம் பரிகசித்தான். மனம் தளராத அருணன் இறைவனை நினைத்து தவமிருந்தான்.



மமதை கொண்ட சூரியன் அருணனின் தவத்தை எள்ளி நகையாடியதோடு பல தொல்லைகளும் செய்தான். சூரியன் கொடுத்த துன்பம் தாங்காது அருணன், முன்னிலும் முனைப்பாக இறைவனை நினைத்து வேண்டினான். இறைவன் அருணனுக்குக் காட்சியளித்து அருள் புரிந்தான். சூரியனிடம் “என்னைத் தரிசனம் செய்ய நினைத்த அருணனைத் துன்புறுத்திய உன் மேனி கிருஷ்ண வர்ணமாய்ப் போகக் கடவது” என்று சாபமிட்டார். இதன் விளைவாக உலகமே இருண்டு போனது. பரமேஸ்வரி சிவபெருமானிடம் “இப்படி சாபமிட்ட வீட்டீர்களே! உலகமே இயங்காது போகுமே” என்று வினவ, “அருணன் தவ பலத்தால் உலகம் பிரகாசமடையும்” என்றார். தன் தவறை உணர்ந்த சூரியன் இறைவனிடம் வேண்ட, “நீ எம்மை ஏழுமாத காலம் பூஜை செய்தால் உனது உருவம் கருமை நிறத்திலிருந்து விடுபட்டுக் குணமடையும்” என்றார்.



தான் சாபவிமோசனம் அடை வதற்காக சூரியன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை ஏழு மாதம் பூஜை செய்து வழிபட்டார். அவ்வாறு வழிபட்ட பின்னரும் தன் கருமை நிறம் மாறாது போகவே வருந்தி, “ஹேமிகுரா” என்று கதறுகிறார். அப்போது சுவாமியுடனிருந்த அம்பாள் தங்களது ஏகாந்தத்தில் குறுக்கிட்ட சூரியன் மேல் கோபம் கொண்டு மீண்டும் சபிக்க முற்பட்டாள். சிவபெருமான் தடுத்து, “நான் கொடுத்த சாபம் நீங்கவில்லையென்ற வருத்தத்தில் என்னை அழைத்துள்ளான். மீண்டும் நீ சாபமிட்டால் உலகம் மறுபடியும் இருண்டு போகும். நீ பரமசாந்தையாயும் உலகம் பிரகாசிக்கவும் தவமிருப்பாயா” என்று அம்பாளைச் சாந்தப்படுத்தி, அம்பாளின் கோபம் தணிய தவமிருக்கப் பணிந்துவிட்டு, சூரியனுக்கு சாபவிமோசனம் அளித்தார். அம்பாள் சாந்த நாயகியாகிறார். அன்னை பராசக்தியின் திருவாயிலிருந்து வசினீ என்ற வாக்தேவதைகள் தோன்றி அவர்கள் திருவாய் மலர்ந்ததுவ சகஸ்ர நாம ஸ்தோத்திரம் எனப்படுகிறது. அம்பாளே அருளியதால் அவரின் பெயர் கொண்டு லலிதா சகஸ்ர நாமம் எனப் பெயர் பெற்றதாகச் சொல்வர்.



இத்தலத்தில் பூஜை செய்து சூரியன் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்படையிலேயே மீயச்சூர் எனப்பெற்றது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21 முதல் 27-ம் தேதி முடிய சூரிய கிரணங்கள் உதயமாகும் நேரத்தில் இவ்வாலயக் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழும். சூரியன், அருணன், காசிப முனிவரின் மனைவி களான கர்த்துரு, விநதை ஆகியோர் இத்தலத்திலிருந்து சிவபெருமானை வழிபட்ட தோடல் லாமல் எமன் இத்தலத்தில் பிறந்து எந்நேரமும் சிவ சிந்தனையுடன் இருந்து பூஜித்ததாகவும், அகத்திய முனிவரும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பூஜை செய்தார்.



100 ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளைக் கெட்டிப்படுத்தும் தெய்வீக சக்தி உண்டு. சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன் ஆயுளைத் தரவல்ல சங்கு கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையும், எமலோகத்தின் ஸ்தல விருட்சங்களில் ஒன்றானதுமான பிரண்டை கலந்த அன்னதானம் செய்து சிவபெருமானை வழிபட்டார் என்பது ஐதீகம். ஸ்ரீ ஹயக்கிரீவர் (பரிமுகப் பெருமான்) அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசம் செய்கையில், “லலிதாம்பாளை எங்கு தரிசனம் செய்யலாம்?” என்று அகத்தியர் வினவ, “அருணனும் சூரியனும் பூஜை செய்த ஸ்தலம் பூலோகத்தில் மீயச்சூர் எனும் ஊரில் உள்ளது. அங்கு சென்றால் அன்னை ஸ்ரீ லலிதாம்பாளைத் தரிசிக்கலாம். அந்த லலிதா சகஸ்ரநாமம் வாசிப்பதனால் பெற வேண்டிய பலன்களையும் அங்கு சென்றால் நிச்சயம் அடையலாம்” என்றார்.



அகத்தியரும் இத்தலத்திற்கு வந்து ஸ்ரீ மேகநாத சுவாமியையும் அன்னை லலிதாம்பாளையும் வணங்கி, பூஜை செய்து லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையின் பூரண பலனைப் பெற்றார் என்பது வரலாறு. பவுர்ணமி தினத்தன்று இவ்வர்ச்சனை செய்து அம்பாளை வழிபட்டால் சகல நன்மைகளும் அடையலாம். அகத்தியர், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையை இவ்வன் னைக்காக அழகிய தமிழில் இயற்றியுள்ளார். இதனை தினமும் பாராயணம் செய்ய சகல செல்வமும், நற்பலன்களும் கிட்டும். அமர்ந்த திருக்கோலத்தில் கலையழகு மிளிர வடிவமைக் கப்பட்டுள்ள அன்னை ஸ்ரீ லலிதாம்பாள் சிலையின் கால்களில் கொலுசு அணிவதற்கு ஏற்ப இடைவெளிகளோடு அமைக் கப்பட்டுள்ளதை அண்மையில் அறிந்து, பக்தர்கள் சிலர் சேர்ந்து கொலுசு செய்து அணிவித் துள்ளார்கள்.



இத்தலத்தில் தாமரை இலைகளில் சங்கு புஷ்பத்தை வைத்து சதய நட் சத்திரத்தில் குறிப்பிட்ட ஹோரையில் சிவபெருமானை பூஜித்து, அத்தாமரை இலையிலே அன் னத்தை படைத்து, ஏழைகளுக்கு அன்னதானமளித்து தாமும் உண்டால் எக்கடுமையான நோய்களால் துன்பப்பட்டாலும் அந்நோயிலிருந்து நிவாரணம் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ காலனும், சிவபெருமானும் அருள் புரிவர் என்பது நம்பிக்கை. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மேகநாத சுவாமிக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்றவைகளைச் செய்தால் பூரண ஆயுளோடு ஆரோக்கியமாய் வாழ்வர்.