நினைத்ததெல்லாம் நடக்கும் சுந்தரகாண்டம்

Apr 03 2025

கவிச்சக்கரவர்த்தி கம்பர் ராமாயண காவியத்தை 10,500 பாடல்களில் படைத்தார். பால, அயோத்தியா, ஆரண்ய, கிட்கிந்தா, சுந்தர, யுத்த காண்டங்கள் இதில் உள்ளன. அவற்றில் சுந்தர காண்டத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. கோயில் சிறப்பு மிக்கது என்றாலும், கருவறைக்கு எப்படி தனிச்சிறப்பு உண்டோ அப்படியே ராமாயணம் என்னும் கோயிலுக்கு கருவறையாக இருப்பது சுந்தர காண்டம். சிறையிருந்த செல்வியான சீதையும் இதற்கு ஒரு காரணம். தாயின் வயிற்றில் பத்து மாதம் வளர்ந்த பின் உலகிற்கு வரும் குழந்தை போல ராவணனால் சிறைப்படுத்தப்பட்ட சீதை அசோக வனத்தில் 10 மாதம் தவமிருந்து ராமனை அடைந்த வரலாறைச் சொல்வது சுந்தர காண்டம். 14 படலங்கள் இதில் உள்ளன.



 



1. கடல் தாவு படலம்



 



2. ஊர் தேடு படலம்



 



3. காட்சிப் படலம்



 



4. உருக் காட்டு படலம்



 



5. சூடாமணிப் படலம்



 



6. பொழில் இறுத்த படலம்



 



7. கிங்கரர் வதைப் படலம்



 



8. சம்புமாலி வதைப் படலம்



 



9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்



 



10. அக்ககுமாரன் வதைப் படலம்



 



11. பாசப் படலம்



 



12. பிணி வீட்டு படலம்



 



13. இலங்கை எரியூட்டு படலம்



 



14. திருவடி தொழுத படலம்



 



ஒன்று முதல் 14 வரை படித்தால் அளப்பரிய நன்மை ஏற்படும். கருவுற்ற பெண் சுந்தர காண்டத்தை தினமும் படிக்க அனுமனைப் போல ஆற்றலும் மதிநுட்பமும் கொண்ட குழந்தை பிறக்கும். நோயுற்றவர்கள் படித்தால் குணமாவதோடு உடல், மனம் வலிமை பெறும். திருமணத்தடை, புத்திர தோஷம் உள்ளவர்கள் படித்தால் தடை நீங்கி திருமணம் கை கூடும். குழந்தைப்பேறு கிடைக்கும்.



 



தொடர்ந்து வரும் துன்பங்கள் விலகி இன்ப வாழ்வு அமையும். சிறைப்பட்டது போல அடைபட்ட மனநிலையில் இருப்பவர்கள் அதில் இருந்து வெளிப்பட்டு மகிழ்ச்சி காண்பர். வாழ்வில் எந்த தேவைக்காகவும், எந்த விருப்பம் நிறைவேற வேண்டும் என்றும் சுந்தர காண்டம் படிக்கலாம். உதாரணமாக வேலை, வீடு போன்ற தனிப்பட்ட பிரார்த்தனை நிறைவேறும்.



 



இதற்காக தமிழ் அல்லது சமஸ்கிருத ராமாயணப் புத்தகத்தை படிக்கலாம். ஒரு நல்ல நாளில் ராமர் பட்டாபிஷேகப் படம் வைத்து அதற்கு துளசி மாலை சாத்தி விளக்கேற்றி பால், பாயாசம், வடை, பானகம் படைத்து வழிபட வேண்டும்.



 



ராமாயண புத்தகத்தின் மீது பூக்கள், சந்தனம், குங்குமம் இட வேண்டும். அருகில் மற்றொரு ஆசனம் அமைத்து அதற்கும் சந்தனம், குங்குமம் இட்டு வழிபட வேண்டும். சுந்தர காண்டத்தின் நாயகனான அனுமனுக்காக இந்த ஆசனம். ஏனெனில் ராமாயணம் ஒலிக்கும் இடத்தில் எல்லாம் அனுமன் நேரில் எழுந்தருள்வதாக ஐதீகம். அதன் பின் படலங்களைப் படித்து தீபாராதனை செய்து வேண்டுதலை ஸ்ரீராமரின் திருவடியில் வைக்க நினைத்தது நிறைவேறும்.