இராமன் சீதையைத் திருமணம் செய்து கொண்டு அயோத்தியாவிற்குச் செல்கிறார். உடன் இலக்குவனும், விசுவாமித்திரரும் செல்கின்றனர். அயோத்தியின் மன்னரான தசரதன் இராமனுக்கு பட்டாபிசேகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்கிறார். அதனை அறிந்த மக்களும், மந்திரிகளும் மகிழ்கின்றனர். மந்தரை எனும் கூனி பரதனின் தாயான கைகேயிடம் சென்று அவளுடைய மனதினை மாற்றுகிறாள். கைகேயி தசரதன் முன்பு தந்த இரண்டு வரங்களை இப்போதைய சூழ்நிலைக்குத் தக்கவாறு, இராமன் காடாளவும், பரதன் நாடாளவும் கேட்டுப் பெறுகிறாள்.
இராமனும், சீதையும் காட்டிற்கு செல்லுகையில், இலக்குவனும் உடன் செல்கிறான். மூவரும் காட்டிற்கு சென்று முனிவர்களையும், குகனையும் சந்திக்கின்றார்கள். குகனை தன்னுடைய மற்றொரு சகோதரன் என்று இராமன் பெருமையாக கூறுகிறார். தசரதன் இறந்து போனதால், இறுதிக் காரியங்களைச் செய்துவிட்டு பரதன் இராமனைக் காட்டில் வந்து சந்திக்கிறார். அயோத்திய அரசை ஏற்க இராமனிடம் வற்புறுத்துகிறார். ஆனால் இராமன் அதனை ஏற்க மறுக்கின்றார். பரதன் இராமன் மீண்டும் வந்து பொறுப்பு ஏற்கும் வரை இராமனின் பாதுகைகளை வைத்து அரசு செய்கிறான்.