இராமன் காட்டில் விராதன், சரபங்கன், அகத்தியர், சடாயு ஆகியோர்களைச் சந்திக்கிறார். அவர்களின் மூலமாக அரக்கர்களைப் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும் அறிந்து கொள்கிறார்.
இராவணனுடைய தங்கை சூர்ப்பணகை இராமனைக் கண்டு காதல் கொள்கிறாள். ஆனால் இராமன் ஏகப்பத்தினி விரதன் என்று பிற பெண்களை ஏற்காமல் இருக்கிறான். இலக்குவன் சூர்ப்பணகையின் மூக்கினை அரிந்து அனுப்புகிறான். அதனால் இராவணனிடம் சென்று இராமனின் மனைவி சீதையைப் பற்றியும் அவளுடைய அழகினையும் கூறி, சீதையின் மீது மோகம் கொள்ள வைக்கிறாள்.
இராவணன் மாயமானை அனுப்பி இராமனையும், இலக்குவனையும் சீதையிடமிருந்து பிரித்து, சீதையைக் கவர்ந்து செல்கிறார். வழியில் சடாயு சீதையை மீட்கப் போராடி வீழ்கிறார். சீதையை இல்லத்தில் காணாது தேடி வரும் சகோதரர்களுக்கு இராவணனைப் பற்றிக் கூறிவிட்டு உயிர்விடுகிறார் சடாயு.