(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்: 26-04-2025 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம் | 17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார் | 06-03-2026 அன்று சனி பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11-05-2025 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2025 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம் | 21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி.
பலன்கள்: அதிகார தோரணையும் நேர்மையும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர்பேச்சு இருக்காது. இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். எனினும் சிக்கனமாக இருந்து சேமிப்புகளையும் பெருக்குவீர்கள். உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு திடீரென்று தொழில் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். நன்றாக யோசித்து செயலாற்றுவீர்கள். சமுதாயத்தில் தலைவன் என்று பெயரெடுப்பீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும். சுயதேவைகளைக் குறைத்துக்கொண்டு உங்களுக்குக் கீழ்வேலை செய்பவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்கள் கெட்டிக்காரத்தனம் கூடும். செல்வாக்கு, அந்தஸ்து இரண்டும் உயரும்.
இறைவழிபாட்டில் கவனத்தை அதிகப்படுத்துவீர்கள். ஏழைகளுக்குத் தானதர்மம் செய்வீர்கள். நெடுநாளாக கருத்தரிக்காமல் இருந்தவர்கள் இந்த காலகட்டத்தில் கருத்தரிப்பார்கள். நீடித்து பாதித்து வந்த நோய்கள் முழுமையாக குணமடைந்துவிடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெரிய ஆலய நிர்மாண வேலைகளிலும் ஈடுபடுவீர்கள். தேவைக்குமேல் பணம் வரும். வராமல் இருந்த கடன்களும் திரும்ப வந்து சேரும். பொழுதுபோக சுற்றுலா சென்று வருவீர்கள். உங்கள் பகுத்தறியும் திறன் கூடும். மன உணர்ச்சிகள் கட்டுக்குள் இருக்கும்.
எண்ணங்கள் புதுமைகளாக மலரும். புதிய படைப்புகளை வாங்குவீர்கள். குடத்திலிட்ட விளக்காக காரியமாற்றி வந்தவர்கள் குன்றின்மேலிட்ட விளக்காகப் பிரகாசிப்பீர்கள். வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் உண்டாகும். நேர்மையான செயல்களால் வீட்டிலும் வெளியிலும் நீதியைக் காப்பாற்றுவீர்கள். சிலர் விலையுயர்ந்த வாகனங்களை வாங்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துவிட்டு நற்பெயர் எடுப்பர். கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பர். சிலநேரங்களில் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம். பணவரவுக்கு தடைகள் வராது. ஊதிய உயர்வினைப் பெறுவர். மேலதிகாரிகள் முழுமையான ஆதரவைத் தரும் ஆண்டாக இது அமைகிறது.
வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பர். விற்பனைப் பிரதிநிதிகளை நியமிப்பர். இதனால் எதிர்பார்க்கும் அதிக லாபத்தைப் பெறுவர். கொடுக்கல் வாங்கல் நன்றாக அமையும். வங்கிகளிடமிருந்து கடன்கள் பெறுவர். கூட்டாளிகளின் ஆதரவும் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வர். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண்வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினர் வெற்றிமேல் வெற்றி காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவர். ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வர். புதிய நண்பர்களால் பலனுண்டு. புதிய படைப்புகளை உருவாக்குவர். பணவரவு நன்றாக இருக்கும். சேமிப்பு உயரும்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். ஆடை அணிமணிகள் சேர்க்கை உண்டு. வெளியூரிலிருந்து மனதிற்கினிய செய்திகளைக் கேட்பர். மேலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் நிதானம் தேவை.
மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவர். ஆசிரியர்களின் பாராட்டும் பெற்று மகிழ்வர். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சிகள் எடுத்து படிக்கவும். விளையாட்டினால் உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்வர்.
மகம்: இந்த ஆண்டு பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.
பூரம்: இந்த ஆண்டு புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். “எருக்க மலரை” சிவனுக்கு அல்லது கணபதிக்கோ அர்ப்பணம் செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலும் கோமாதாவிற்கு அமவாசை தோறும் அகத்திக்கீரையும் கொடுக்கலாம். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி நடக்கும். கிழக்கு, வடக்கு திசைகள் அதிர்ஷ்டம் தரும். சூரியன் - புதன் - குரு ஆகிய ஹோரைகளில் எதை ஆரம்பித்தாலும் தங்கு தடையில்லாமல் காரியங்கள் நடந்து முடியும்.