kambaramayanam

May 26 2025

கம்பராமாயணம் (Kamba Ramayanam) எனும் நூல் கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். இராமாவதாரம் என்ற பெயரில் கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும் (வெவ்வேறு நூல்களிலும் பல வேறுபாடுகள் உண்டு). இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் தன் புலமையை வெளிக்காட்ட தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ் சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார். {("வடசொல் கிளவி வடஎழுத் தொரீ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே ") (தொல்காப்பியம், எச்சவியல், 5)}



மூல இலக்கியமான வடமொழி இராமாயணத்திலிருந்து சில மாறுபாடுகளோடு கம்பர் இந்நூலை இயற்றியிருந்தார். கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால், இது கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.



கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 118 படலங்களையும் உடையது. இதில் 10589 பாடல்கள் உள்ளன. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய "உத்திர காண்டம்" என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய "ஒட்டக்கூத்தர்" இயற்றினார் என்பர். தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பரின் காலத்தில் (பொ.ஊ. பன்னிரண்டாம் நூற்றாண்டு) உச்சநிலையினை அடைந்தது என்பர். இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் "தமிழுக்குக் கதி" (கம்பராமாயணம் திருக்குறள்) என்பர்.



கம்பரின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு. கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன. "வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற்றாறே (யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை 96)" என்றொரு கணக்கீடும் உண்டு.



கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. அணி, பொருள், நடை ஆகியவற்றால் சிறந்து விளங்குவது. சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப் பண்பாட்டோடு இயைந்து விளங்குவது.